Rock Fort Times
Online News

ஐ.டி. சோதனை நிறைவு: திருச்சி காண்ட்ராக்டர் வீட்டில் பல கோடி ஆவணங்கள்- கட்டுமான நிறுவனத்தில் ரூ.50 லட்சம் பறிமுதல்…!

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பறக்கும் படை நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 6ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதேபோல, திருச்சியிலும் சோதனை நடத்தப்பட்டது. திருச்சி கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எஸ்எம்டி.மூர்த்தி என்கிற ஈஸ்வர மூர்த்தி. இவர் டிராவல்ஸூம், பெட்ரோல் பங்க் ஒன்றும் நடத்தி வருகிறார். மேலும், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரராகவும், ஒப்பந்ததாரர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடந்த 5-ந்தேதி இரவு, 7 மணிக்கு சோதனையை துவங்கினர். நேற்று முன்தினம் காலை மதுரையிலிருந்து வந்த 2 பேரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டின் முன்பு சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மேட்டுத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) என்பவரை, ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
சமீபகாலமாக, சதீஷ்குமார் பெயரில் ரோடு காண்ட்ராக்ட் மற்றும் நிலங்களை ஈஸ்வரமூர்த்தி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (08-04-2024) அதிகாலை 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. சோதனையின்போது, பெட்ரோல் பங்க்கில் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கம், பென் டிரைவ், ஹார்டுடிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ‘எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரில் சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டார். ஈஸ்வரமூர்த்தி வீட்டில் இருந்து, கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்களை, 2 சூட்கேஸ்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், முறைகேடாக பணவர்த்தனையில் ஈடுபட்ட சில துண்டுச் சீட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவை, தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்ததற்கான கணக்கா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கு தொடர்புடையதாக கூறப்படும் திருச்சி கே.கே. நகர் தென்றல் நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இந்த நிறுவனமும் நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இங்கு ரூ.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கப்பட்ட பணமா? அல்லது கணக்கில் வராத அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பணமா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருச்சியில் ஐடி சோதனையில் அதிக அளவு பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கிய சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்