டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை:16-ம் தேதி ஒரு நாள் மட்டும் பிரமிக்க வைக்கும் வகையில் மது விற்பனை…!
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் 102 தொகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும், உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதேபோல வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட இருக்கிறது. மதுக்கடைகளை ஒருநாள் மூடினாலே மதுபிரியர்கள் தாங்க மாட்டார்கள். தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூடினால் சும்மா விடுவார்களா?. கடை திறக்கப்பட்டு இருந்த 16-ந் தேதி டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபிரியர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள், 3 நாட்களுக்கு தேவையான மது வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளின் முன்பு திருவிழா கூட்டம் போல காணப்பட்டது. கடைகள் திறந்தது முதல் மூடப்படும் வரை மதுக்கடைகள் பரபரப்பாக செயல்பட்டன. அந்தவகையில், 16ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.298.29 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “டாஸமாக விற்பனை ஏப்ரல் 16-ந்தேதி அதிகம் தான். அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி விற்பனை ஆனது. திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடிக்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற விற்பனை 2 மடங்கு அதிகமாகும்” என்று கூறினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.