கணவருடன் சென்ற போது விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் போலீஸ் ஏட்டு மீது லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு…!
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பரிமளா (42). இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார். நாளை(19-04-2024) நடக்க உள்ள மக்களவை தேர்தல் தொடர்பான பணிக்காக திருப்பத்தூருக்கு சென்று விட்டு கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரிமளா மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ஒரு லாரி ஏறி , இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.