திருச்சி, திருவெறும்பூர் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா- இடத்தை பார்வையிட்ட 2 அமைச்சர்கள்…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே ஹெச்ஏபிபி தொழிற்சாலை அருகே உள்ள 150 ஏக்கர் இடத்தை தமிழக அரசு பெற்று அங்கு சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அந்த இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று(09-07-2024) நேரில் பார்வையிட்டனர். பின்னர், அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர், தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பெல் நிறுவனத்தைச் சுற்றி பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. இந்த பிரச்சனை கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால், மாற்றான் தாய் மனப்போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. இதனால்தான் திருச்சி பெல் ஆலைக்கு பெரிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை. இந்த இடத்தில் புதிய செக்டார் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் திருச்சி பெரிய அளவில் தொழில் வளர்ச்சி அடையும். கப்பல் துறைமுகம் இல்லாத இடத்தில் தொழிற்சாலை கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு தொழிற்சாலை கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை. இந்த பகுதியில் அமையும் தொழிற்சாலை மூலம் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று கூறினார் . அப்போது, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
Comments are closed.