திருச்சி மாநகரில் சமீபகாலமாக கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ச்சியாக இருந்து வந்தது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, பஸ் ஸ்டாண்ட், கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த திருட்டு கும்பல், தங்களது கைவரிசையை தொடர்ச்சியாக அரங்கேற்றி வந்தது. இது தொடர்பாக, திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில், பல்வேறு கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 14 பேரை ஒரே நாளில் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது திருச்சி மாநகர காவல் துறை. இவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது., திருச்சி மாவட்டம், திருவரங்கம் தாலுகா ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடி காந்தி காலனி சேர்ந்தவர் வீரமணி ( 30 ). இவர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது நண்பரை அழைப்பதற்காக, மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ்கள் இருக்கும் இடத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், கத்திமுனையில் இவரிடம் செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலக்கரையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.
இதேபோல், எடமலைப்பட்டி புதூர் புங்கே ஆயில் நிறுவனம் பகுதியிலும், டி.எஸ்.பி. பட்டாலியன் அருகிலும் கௌதம், நந்தகுமார் ஆகிய இரண்டு வாலிபர்களிடம் செல்போன் பறித்ததாக கம்பரசம்பேட்டையை சேர்ந்த சூர்யா, நாகமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன், மகேந்திரன், யுவராஜ் மற்றும் 17 வயது சிறுவன் உள்படஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலியாண்டபுரம் பாத்திமா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குழந்தைவேலு என்பவரிடம், பாலக்கரை வேர்ஹவுஸ் பஸ் நிறுத்தம் அருகில், கத்தி முறையில் பணம் பறித்ததாக பாலக்கரையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மேத்யூ ஆகிய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல், அரியமங்கலம் திடீர் நகர் காந்தி தெருவை சேர்ந்த ராஜாத்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளை திருடியதாக அரியமங்கலத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியன், அஜய். வசந்த் ஆகிய மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தென்னூர் பென்சனர் தெருவை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரிடம் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றதாக முகமது செலர்சா, நித்தின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உஸ்மான் அலி தெருவை சேர்ந்த கண்ணன் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம், தென்னூர் சிவப்பிரகாசம் சாலையில் வைத்து கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றதாக தென்னூரைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபரை கைது செய்தனர். இவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது .திருச்சி மாநகரில் கொள்ளை, திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.