திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் ரம்யா ( வயது 24). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமிக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவர்களை பெற்றோர்கள் சமரசம் செய்து வைப்பதும் வாடிக்கையான ஒன்று என்று கூறப்படுகிறது. வழக்கம்போல சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கப் போவதாக அருகில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளுடன் ரம்யா சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ரம்யாவின் தாய் நிர்மலா பல்வேறு இடங்களில் தேடியும் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதைஅடுத்து முசிறி போலீசில் நிர்மலா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ரம்யா மற்றும் குழந்தைகளை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா? அல்லது வாழ்க்கையில் வெறுப்படைந்து குழந்தைகளுடன் வேறு எங்கேயும் சென்று விட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.