“ஹாட்ரிக்” வெற்றி பெறுமா பாஜக? ஆட்சியை பிடிக்குமா இந்தியா கூட்டணி? – பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை…!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வாக்கு எண்ணிக்கை நாளை(04-06-2024) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.அதனைதொடர்ந்து 8-30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழகத்தின் பேரவை தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் உள்ள இடங்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக 10 ஆயிரம் அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 58 பொது பார்வையாளர்கள், 817 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவ படையினர் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை நிலவரம் வர, வர யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். பாஜக ஏற்கனவே இருமுறை வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இந்த முறையும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என கட்சியினர் ஆவலில் உள்ளனர். ஆனால் இந்த முறை இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.
Comments are closed.