“உண்மையானவராக, நேர்மையானவராக இருந்தால் கரூரில் நிற்க வேண்டியதுதானே?”* செந்தில் பாலாஜிக்கு இ.பி.எஸ்.கேள்வி!
தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் கோவையில் இன்று (16.04.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “செந்தில் பாலாஜி உண்மையானவராக, நேர்மையானவராக இருந்தால் கரூரில் நிற்க வேண்டியதுதானே?. நான் எடப்பாடியில் நிற்கிறேன். வேலுமணி தொண்டாமுத்தூரில் நிற்கிறார். அவரவர் தொகுதியில் நிற்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாதிரி வந்து நிற்கிறீர்கள்?. அங்கே மக்கள் நிராகரித்து விட்டார்கள். அதனால் அங்கே வேலை இல்லை. நான் எடப்பாடியில் 11வது முறையாக நிற்கிறேன். இன்னும் என்னுடைய மக்களிடம் நான் ஓட்டு கூட கேட்க செல்லவில்லை. நான் இன்னும் தொகுதிக்குள்ளேயே போகவில்லை. அப்படி தொகுதிக்குள்ளேயே போகாமல் கூட என்னுடைய மக்கள் என்னை நேசிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவராக என்னை பார்க்கின்றனர். மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவர்களுடைய எண்ணத்தை நான் செயல்படுத்தினேன். ஆனால் இங்க நிற்கிற வேட்பாளர் அப்படிப்பட்டவரா?. அங்க சுரண்டி முடித்தாயிற்று. சட்டியைச் சுரண்டி கவிழ்த்து வைத்துவிட்டார். கோவை மாநகரம் செல்வம் கொழிக்கிற பகுதி. மாநகரப் பகுதியில் தங்கத்துக்கு முத்திரை வைக்கிறேன் என்று அவர் முத்திரை வைத்துவிட்டு போய்விடுவார். நல்லா உஷாரா இருந்து கொள்ளுங்கள். அவர் முத்திரை வைக்க தான் வருகிறார். அவர் அந்த தொழிலையும் ஆரம்பிச்சிருவாரு. அப்புறம் அந்த தொழில்கள் எல்லாம் அம்போ என போக வேண்டிய துதான். உஷாராக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். ஒரு படத்தில் சொன்னார்கள் விழித்துக் கொண்டவர்களெல்லாம் பிழைத்துக் கொண்டார்கள் என்று. அதேபோல கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் விழித்துக் கொண்டால் நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்” எனப் பேசினார்.

Comments are closed.