Rock Fort Times
Online News

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் உத்தரவிட்டும் போலீசாருக்கு உணவுப்படி வழங்க மறுப்பது ஏன்?* குமுறும் போலீசார்..!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரையிலானவர்களுக்கு உணவுப்படி (Food Allowance) பணிப் பிரிவு மற்றும் இடத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது. தேர்தல் பணிகள், விஐபி சிறப்புப் பாதுகாப்புப் பணிகள், போராட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு பணிகளின்போது பணியாற்றும் காவலர்களுக்கு நாள் அடிப்படையில் ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் உணவுப்படி வழங்கப்படுகிறது. சென்னை மாநகரை பொறுத்த அளவில் 31 நாட்களும் உணவுப்படி வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களின் மாநகர பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மாதத்தில் 3 நாள், 5 நாள், 7 நாள் என கணக்கிட்டு உணவுப் படி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் திருச்சி சிட்டி கமிஷனராக ஏற்கனவே பணியாற்றிய மஞ்சுநாத் ஐபிஎஸ், சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ் ஆகியோர் போலீசாருக்கான உணவுப் படியை மாதந்தோறும் 5 நாட்கள், 7 நாட்கள் என முறையாக வழங்கி வந்தனர். இதன்மூலம் காவலர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்க்கு மேல் கிடைத்து வந்தது. தற்போது சிட்டி கமிஷனராக ரூபேஷ்குமார் மீனா ஐபிஎஸ் பதவி ஏற்ற பிறகு போலீசாருக்கான உணவுப்படியை மாதந்தோறும் முறையாக வழங்க உத்தரவிட்டார். அந்தவகையில் திருச்சி மாநகர பகுதியில் பணியாற்றிய போலீஸாருக்கு 7- 11- 2026 முதல் 9-11- 2026 வரை 3 நாட்களுக்கான உணவுப்படி ரூ.750 வழங்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால், இந்த 3 நாள் உணவுப்படி தொகை திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 5 நாள் காவல் பணிக்கு செல்லும் போலீசாருக்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது.இது எந்த வகையில் நியாயம்?. காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் அயராத பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதில் உணவுப் படியும் ஒன்றாகும். அரசாங்கமே கொடுக்கும் போது இவர்கள் ஏன் வழங்க மறுக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. அதுவும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டும் உணவுப்படி வழங்க மறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. தற்போது திருவண்ணாமலை தீபத் திருவிழா பந்தோபஸ்துக்கு 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 5 நாட்கள் உணவுப்படி வழங்கப்படும். அந்த உணவுப்படியோடு இந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்களையும் சேர்த்து 8 நாட்கள் உணவுப்படி வழங்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்