Rock Fort Times
Online News

கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க உத்தரவிடக்கோரிய தமிழக அரசின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி…!

காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதனைக் கண்காணிக்கக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாகவும் கூறி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழக அரசு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் முறையிட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12-ம் தேதி வரை வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்கப் பரிந்துரைக்கப்
பட்டது. ஆனால், இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை எனக் கூறி, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆணையத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, 15 நாட்களுக்கு வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், ஆகஸ்ட் 25 முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரும், செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீரும் திறக்க உத்தரவிடப்பட்டது.இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு 20 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நிலுவை நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தேவைகளைக் காரணம் காட்டித் தண்ணீர் திறக்க இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தொடர்ந்து, அக்டோபர் 7-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 11 டி.எம்.சி நீர் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனைத் திறக்கக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியும் தமிழக அரசு மீண்டும் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. அதன்படி இன்று (நவ. 20) நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரீஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தொடர்ந்த இரண்டு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்