அரசியல் காரணங்களுக்காக த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை சட்டப்படி எதிர்கொண்டு திமுக வெல்லும்…- மு.க.ஸ்டாலின்…!
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்கள் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று(நவம்பர் 20) முன்னாள் வணிக மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை நடத்தி னர். தொடர்ந்து அவரது உறவினரான பாலமேடு பகுதியில் வசிக்கும் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் உள்ள ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில்,
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள், மத்திய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும், ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம், ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு திமுக வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய், இனியும் ‘தி.மு.க., தி.மு.க.,’ என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.