தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(04-07-2024) திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், இடைத்தேர்தல் என்று சொன்னாலே ஆளுங்கட்சியின் அத்து மீறல்கள் அதிகமாக இருக்கும். இந்தியாவில் 90 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் தான் வெற்றி பெறுகிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுகவினரின் வாகனங்களில் வேட்டி-சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு விக்கிரவாண்டியில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என பிரச்சாரம் செய்வதை சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு வந்து விடுவோம் என தெரிந்துதான் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக ஒதுங்கி இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளச்சாராயம் மரணங்கள் எதிரொலிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அதேபோல விஜய் அவருடைய கருத்தை கூறியுள்ளார். பாஜக ஆதாரத்தின் அடிப்படையில் நீட் தேர்வை ஆதரிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றும் தமிழக அரசு அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?.
2021-ம் ஆண்டுக்கு முன்பு வரை யாரும் ஒன்றிய அரசு எனக் கூறவில்லை. நடிகர் விஜய் ஒன்றிய அரசு எனக் கூறுகிறார் என்றால் அவரும் திமுக சார்பு நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. புதிய கல்விக் கொள்கையில் ஒரு சில மாற்றங்களை மட்டுமே செய்து மாநில கல்வி கொள்கையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீசிவசுப்பிரமணியம்,தொழிலதிபர் ஜெயகர்ணா, முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட பொதுசெயலாளர் ஒண்டிமுத்து, ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி சரவணன், இந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.