நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது மகள் பிறந்துள்ள நிலையில், அவரது குழந்தைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் சீர் வரிசை எடுத்துச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேளதாளங்கள் முழங்க, பல்வேறு வகையான சீர் வரிசை தட்டுகளுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சீமான் இல்லத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் சென்றார். அப்போது, சீமான் வீட்டின் வாசலில் காத்திருந்து அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் சீமானுக்கு சால்வை அணிவித்து கட்டித்தழுவியதுடன், அவரது குழந்தைக்கு தங்கச் செயின் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த அன்பான தருணங்களை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது மகள் பிறந்துள்ளார். இதையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சீமானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று(28.05.2026) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
“தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பக்ரீத் பண்டிகைக்காக மாடு வெட்ட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதையெல்லாம் த.வெ.க.வுக்கு வாக்களித்த இஸ்லாமியர்கள் உணர வேண்டும்” என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இஸ்லாமியர்கள் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், கனிமவளங்களை தமிழக பயன்பாட்டிற்காக ரசீதுடன் கொண்டு செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார், மேலும் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவை பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவருடைய மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அடிப்படையில் தாய்மாமன் சீர் கொண்டு சென்றேன் என விளக்கமளித்திருந்தார்.

Comments are closed.