சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் கற்றலை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார். கணிதப் பாடம் இனி கதைகள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்கப்படும் என்றும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த புதிய கல்வி முறை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன்கள், அதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட எதிர்காலத் தேவைகளுக்கேற்ப புதிய பாடங்கள் கற்பிக்கப்படும் என்றார். மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும், வண்ணப்படங்கள் நிறைந்த, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். “புத்தகப் பை சுமை குறைந்தால், மாணவர்களின் மனச்சுமையும் குறையும். காலத்திற்கு ஏற்ப கல்வி முறையும் மாற வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கும் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம். பெற்றோரை மதிக்கும் பண்புகளையும் வளர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமையும்,” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Comments are closed.