திருச்சியில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான எம்ஜிஆர் சொத்துக்கள் யாருக்கு? – * கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவால் பரபரப்பு…!
சினிமாவிலும், அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர் எம்.ஜி.ஆர். திருச்சி மக்கள் மீது அதிக பாசம் கொண்ட எம்ஜிஆர், திருச்சிக்கு தான் வந்தால் தங்கிக் கொள்வதற்காக உறையூர் பகுதியில் பங்களா ஒன்றை வாங்கினார். அந்த பங்களா இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதன் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி, வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் இன்று( ஜூன் 9) திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஒரு மனு அளித்தார். அதில், திருச்சி திரு தாந்தோணி ரோடு உறையூர் பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் காலியிடம் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதனுடைய இன்றைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணி மகள் மற்றும் மகன்கள் வாரிசுகளாக பதிவு செய்து, அவர்களது பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது. பின்னர் வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் என பதியப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு ஒரு தனி நபரின் பெயரில் கணினி நிலப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. எம்ஜிஆர்-ன் வாரிசுகளின் பெயர்களை ரத்து செய்ய வேண்டும் என்றால் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து கோட்டாட்சியரின் ஆணை பெற்று அதன்பேரில் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த முறை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன். கோட்டாட்சியர் 1-10 -2021 மற்றும் 18 -10 -2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணையும் மேற்கொண்டார். தற்போது நிலப்பதிவேட்டில் எம்ஜிஆர் வாரிசுகளின் பெயர்களை பதியாமல் அந்த தனி நபரின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் அதிமுக என கணினியில் பதியப்பட்டுள்ளது. எம்ஜிஆர் தனது பெயரில் கிரயம் பெற்ற பத்திர நகலினை இத்துடன் இணைத்துள்ளேன். எம்ஜிஆர் தனது சொத்தினை அதிமுகவிற்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா?அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா ?என்பதை விளக்க வேண்டும். ஆகவே, இந்த விவகாரத்தில் தாங்கள் (கலெக்டர்) கோட்டாட்சியரின் அலுவலக கோப்பினை பெற்று ,கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவினை பரிசீலனை செய்து வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர்களை நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed.