நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அவர் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என்று அறிவித்து செயல்பட்டு வருகிறார். அவரது கட்சியில் இணையும் பிரபலங்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த
ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் கட்சியில் இணைந்த ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ், இந்திய வருமான வரித்துறையில் பணியாற்றியவர். தமிழகத்தில் பணியாற்றிய அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு மாற்றப்பட்டார். மருத்துவரான இவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார். 2009 ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். தொடர்ந்து பீகாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாட்னாவில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். ஆனால், நேரடியாக அல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி, மூலம் விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை அருண்ராஜ் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கும் அனுப்பியநிலையில் அந்த ராஜினாமா மத்திய அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தநிலையில், இன்று(09-06-2025) சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த அருண்ராஜ், தவெகவில் இணைந்தார். அருண்ராஜுக்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

Comments are closed.