திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஸ்தானிக பட்டர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் ஸ்தானிக பட்டர்கள் ஆவர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். தீபம் ஏற்றப்படுவதைக் காண இன்று திருப்பரங்குன்றத்தில் அதிக அளவில் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் 8 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உட்பட மொத்தம் 16 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று சிகிச்சை அளிப்பதற்காக 4 இருசக்கர வாகன மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மற்றும் மேல்சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு உதவுவதற்காக 8 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வயதானவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Comments are closed.