Rock Fort Times
Online News

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியுள்ளோம்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.28) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்னையை நாம் அணுகியுள்ளோம். தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும்போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் அளித்துள்ளோம். தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து வரவுள்ளது என்றும், இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் என்றும் இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரிக்கை விடுத்தது திமுகதான். இதுகுறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தினோம். இந்திய அளவிலான தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், யாருடனும் ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக எந்தவித உறுதியும் அளிக்காமல் மர்மமான மசோதாவைக் கொண்டுவந்தார்கள். அதைப் படித்துப் பார்க்கக்கூட உரிய கால அவகாசம் வழங்காமல் அவசரமாகக் கொண்டுவந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இதன் மூலம் பாஜகவுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தோம். தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும் என்று நாம் விரும்பினாலும், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வை 2024-ம் ஆண்டிலேயே சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் முன்வைத்தோம். நாம் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ விகிதத்தைக் குறைத்திருப்பார்கள்.

ஆனால், தற்போது மசோதாவின் நகல் கிடைத்துள்ளது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். தற்போது நாம் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைத்திருப்பார்கள். அது தமிழ்நாட்டிற்குப் பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்துள்ளோம். நாம் எதிர்பார்த்ததைப் போலவே இந்த மசோதா வந்துள்ளது. நம்மைப் பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் தற்போது வரை உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது. அதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் நமது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம். 1967-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது, 42 ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளை 39 ஆகக் குறைத்தார்கள். ஆனால், தற்போது நம்முடைய பிரதிநிதித்துவ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதை உறுதி செய்துள்ளோம்.

நம்முடைய கடமையை நாம் செய்துள்ளோம். இதை அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரையுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் காட்டக்கூடாது. எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் கூறியுள்ளார். அதன்படி நடந்துகொள்ளுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்