தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு, தனக்கு ஆதரவான மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, பிற மாநிலங்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, இத்தகைய போக்கைக் கைவிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.28) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைக் கொண்டுவரும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும், தொகுதி மறுவரையறையால் தென் மாநில மக்களின் குரல் ஒடுக்கப்படுவதுடன், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளும் மறுக்கப்படும் எனக் கூறியும், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதன் ஒரு பகுதியாக, திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே 50-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும், தற்போதைய தொகுதி வரையறையின்படியே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


Comments are closed.