ரூ.32 லட்சத்தை சொந்த மாவட்டத்திற்கு வாரி வழங்கிய லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ்…* சொந்த தொகுதியும் கவனம் பெறுமா?
திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருப்பவர் லீமாரோஸ். பிரபல லாட்டரி அதிபரான மார்ட்டினின் மனைவியான இவரது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை. ஆரம்பத்தில் அதிமுக சார்பில் இராமநாதபுரத்தில் இவர் போட்டியிடுவார் என எதிர்பாக்கப்பட்டது. அதற்காக இவரது குழுமத்திற்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பல லட்சங்களில் நன்கொடைகளும்,நலத்திட்டங்களும் தொகுதி முழுக்க செயல்படுத்தப்பட்டன. இறுதியில் லால்குடி தொகுதியில் உள்ள உடையார் வாக்குகளை கருத்தில் கொண்டு, லீமாரோஸ் இத்தொகுதியில் போட்டியிட கட்சித்தலைமை இவரது பெயரை டிக் செய்தது. வேட்பாளராக அதிமுக சார்பில் இவர் அறிவிக்கப்பட்டதிலிருந்து சுற்றிச் சுழன்று சூறாவளி பிரச்சாரம் செய்தவர் தேர்தல் களத்தில் பல முக்கிய வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார். லால்குடி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.லால்குடி அரசு மருத்துவமனைக்கென சொந்தமாக இடம் வாங்கி ஹை டெக் மருத்துவமனை அமைத்துத்தருவேன். சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்வேன். .கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் சமரசமின்றி ஈடுபடுவேன் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் எம்.எல்.ஏவான இந்த 6 மாதத்தில் லால்குடியில் வேலை வாய்ப்பு முகாம் மட்டும் லீமாரோஸ் தரப்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக திமுக கோட்டையாக அறியப்பட்ட லால்குடி தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரட்டை இலை வெற்றி பெற்றுள்ளது. தனது சொந்த தொகுதியான லால்குடியில் எம்.எல்.ஏவான லீமாரோஸ் செய்யவேண்டிய வேலைகளே கடலளவு இருக்கும் போது,சமீபத்தில் காளையார் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.32.50 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களும், அதேபோல,தொண்டியில் உள்ள மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரமும் வழங்கியுள்ளார். இது லால்குடி தொகுதி மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் இவர் தலைவராக இருக்கும் ரோட்டரி கிளப் ஆஃப் கோல்டன் மற்றும் இவரது குழும அறக்கட்டளை சார்ந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. எங்கு யாருக்கு உதவ வேண்டும் என்பது அவரவர் விருப்பமாக இருந்தாலும்,சொந்த ஊருக்கு செய்த உதவியைப்போலவே வாக்களித்து வெற்றிபெற வைத்த லால்குடி தொகுதி மக்களுக்கும் அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மார்ட்டின் உதவ முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Comments are closed.