தொலைந்து போன சோழர்காலத்து செப்பேடு எங்கே? அன்பில் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.விசாரணை !
கி.பி 957 முதல் 970ம் ஆண்டு வரை ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். அவரது அமைச்சரவையில் முதன் மந்திரியாக இருந்தவர் அனிருத்த பிரம்மராயர். அனிருத்த பிரம்மராயரின் நிர்வாக திறமைக்கு அங்கீகாரமாக, சுந்தரச்சோழன் அவருக்கு, பிரமாதிராஜன் என்ற பட்டத்தையும், மயிலாடுதுறை அருகே கருணாகரமங்கலம் என்ற பெயரில், 10 வேலி நிலத்தையும் தானமாக வழங்கினார். அதை மாதவபட்டன் வாயிலாக, 11 செப்பேடுகளில் எழுதி ஒப்படைத்தார். இதற்கு அன்பில் செப்பேடு என்று பெயர். இந்த அன்பில் செப்பேடு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த செப்பேடானது சோழர்களின் செப்பேடு என்பதை விட தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. அதில் சோழர்களின் தலைமுறை குறித்தும் அவர்களின் போர்கள். வெற்றி, கல்வி மருத்துவ ஆன்மீகப் பணிகள் குறித்தும் விரிவான விபரங்கள் எழுதப்பட்டுள்ளது.1957ல் மைசூரில் இருந்து தொல்லியல் துறை குழுவினர் அன்பில் சத்திய வாஹீஸ்வரர் கோவிலில் இருந்த போது அன்பில் செப்பு தகடை நேரில் பார்வையிட்டு படிமம் எடுத்துச்சென்றுள்ளனர். அதன் பிறகு இந்த தகடு இந்தக் கோவிலில் இல்லை. எங்கு உள்ளது? என்ற தகவலும் இல்லை.அன்பில் தகடு பற்றிய விபரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி சிவகுமார் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு, அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
Comments are closed.