கோயம்புத்தூர் பன்னிமடை அருகேயுள்ள டாலியூரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்களுக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதியர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் செல்வபுரத்தில் வசித்து வந்தனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். குழந்தைகள் மகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், மே 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மகேஸ்வரியின் மகளான அபிராமி (12) வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகேஸ்வரி மே 19ஆம் தேதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து சுமார் 12 நாள்களாகியும், போலீஸார் புகாரை கிடப்பில் போட்டுள்ளதாகவும், விரைந்து தனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த செய்தி செய்தித்தாள்களிலும் டி.வி சேனல்களிலும் வெளியானது. இந்நிலையில் அவரது புகாருக்கு திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், சிறுமி அபிராமி தனது தந்தை ராஜ்குமார் பராமரிப்பில் செல்வதாகவும், தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசிக்கப் பிடிக்கவில்லையெனவும், திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல ராஜ்குமாரும் தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை, தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் காவல் நிலைய தொலை பேசிக்கு சிறுமி அவரது கைப்பேசியிலிருந்து தொடர்பு கொண்டு, தனது தந்தை பராமரிப்பில் செல்வதாகவும் பணியிலிருந்த காவலர்களிடம் கூறியுள்ளார். அவர்களது இருப்பிடம் குறித்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.