திருச்சியில் ரவுடி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கியால் சுடப்பட்டதால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி ஸ்ரீரங்கம், அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த, 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த, பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (எ) சுரேஷ் (35), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள ஆட்டுக்குட்டி சுரேஷ், தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, இருச்சக்கர வாகனத்தில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருவானைக்காவல் அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, மற்றொரு இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர், சுரேஷ் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதினர். இதில், சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மேலும் 4 பேர் சுரேஷை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்க முன்ற அவரது மனைவியும் வெட்டப்பட்டார். இதில், சுரேஷின் தலைப்பகுதி, முதுகு முழுவதும் சிதைக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ஜம்புகேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வந்தனர்.
அவர்களில் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே பதுங்கி இருந்த ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் விரட்டி பிடிக்க முயன்ற போது உதவி ஆய்வாளர் ராஜகோபாலை ஜம்புகேஸ்வரன் அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தன்னை தற்காத்து கொள்வதற்காக ஜம்புகேஸ்வரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜம்புகேஸ்வரன் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் கீழே விழுந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ கோபாலுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த போலீசாரிடம் நலம் விசாரித்ததோடு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், குற்றவாளி ஜம்புகேஸ்வரன் காவலர்களை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார். அப்போது தங்களை தற்காத்துக் கொள்ள ஆய்வாளர் ராஜகோபால் ஜம்புகேஸ்வரன் காலில் சுட்டு பிடித்துள்ளார் இதுகுறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்வார். ஜம்புகேஸ்வரன் மீது 15 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார். ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய வரை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.