திருச்சி தெற்கு மாவட்ட திமுக, கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி 13, 13 ஏ சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை கூட்டம் வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்றது. மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் வரவேற்றார். வட்ட செயலாளர் சங்கர், சரவணசெல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
கழக செய்தி தொடர்பாளர் மற்றும் இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, மாநகர கழக செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 100 நிகழ்ச்சியை கடந்து சென்று விட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றும் நம்மை வழி நடத்துகிறார். நுழைவுத் தேர்வு என்பதே இருக்கக்கூடாது என அதனை ஒழித்துக் கட்டியவர் கருணாநிதி. அதனால்தான் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இன்றைக்கு குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தங்களை செய்து பிற மொழியை திணிக்க பார்க்கிறார்கள். தமிழ் மொழியை மறக்கடிக்கும் அளவுக்கு கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய அரசு, பிற மொழியை திணித்துக் கொண்டிருக்கிறது.
மொழி திணிப்பு என்று வரும்போது அன்றைக்கும், இன்றைக்கும் கருணாநிதி தான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். மொழி திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம். அது இந்தியாக இருந்தாலும் சரி, எந்த மொழியாக இருந்தாலும் சரி எதிர்ப்போம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். ஏன், 34 தொகுதிகள் மட்டும் குறை வைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார் .முடிவில், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை நன்றி கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
1
of 850
Comments are closed.