68 கொள்ளை சம்பவங்களை தில்லாக அரங்கேற்றிய வாலிபரை “ஸ்கெட்ச்” போட்டு தூக்கிய காவல்துறை…! (வீடியோ இணைப்பு)
கோவை மாநகரில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் மூளையாக செயல்பட்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராடுமேன்(எ) மூர்த்தி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின், கைது செய்யப்பட்டுள்ள ராடுமேன்(எ) மூர்த்தி என்பவர் மீது கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 68 வழக்குகள் உள்ளன. இவரது குழுவில் ஏழு பேர் உள்ள நிலையில் தற்போது மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். இவர் ராடை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர் எனவும், முகமூடி அணிந்து கொண்டும் சட்டையின் மீது ஒரு பையை போட்டுக் கொண்டு அதன் மேல் மற்றொரு சட்டையை போட்டுக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவார் என தெரிய வந்துள்ளது. ஒட்டன்சத்திரம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபரும் இவர் தான். கோவை மாநகரில் சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 1,500 சவரன் நகைகளையும், கோவை மாவட்டத்தில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இரண்டு கார்கள், 13 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு பைக் என வாகன திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொள்ளை அடிக்கும் நகைகளை உருக்கி அதனை விற்று அந்த பணத்தை எல்லாம் ராஜபாளையம் பகுதியில் சுமார் 4 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில் ஒன்றையும் வாங்கி அதில் முதலீடு செய்துள்ளனர். இவரது மனைவியும், இவர் செய்த குற்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். ராஜபாளையம் காவல்துறையினர் சுரேஷ் என்பவரை பிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம். இந்த தனிப்படையினர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது அவர் முகமூடி அணிந்து இருந்ததால் ஒவ்வொரு சிசிடிவியிலும் பதிவாகி இருந்த கண், வாய் உள்ளிட்டவற்றை நன்கு கூர்ந்து கவனித்து ஓவியமாக ஒரு முகத்தை வரைந்து அதன் அடிப்படையில் தேட ஆரம்பித்து இவரை பிடித்துள்ளதாக கூறினார்.
Comments are closed.