Rock Fort Times
Online News

யாரையும் மதிப்பதில்லை, சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்: பரபரப்பு குற்றச்சாட்டு…!

திருச்சி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இன்று(17-09-2024) நாம் தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.  அப்போது வழக்கறிஞர் பிரபு கூறுகையில்,  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை யாருக்கும் அதிகார பகிர்வு கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.  அனைத்து பொறுப்புகளுமே தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார்.  கட்சிக்காக அவர் ஒவ்வொரு முறை நிதி கேட்கும்போதும் எங்களுடைய கைகளில் இருந்தும், பாக்கெட்டுகளில் இருந்தும் அள்ளி பல கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.  உதாரணத்திற்கு இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் ஆயிரம் டன் உணவுப் பொருட்களும், பல கோடி ரூபாய் நிதியும் வழங்கியுள்ளோம். ஆனால், அந்த உணவுப் பொருட்களும், பணமும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு சென்றடையவில்லை.

அதேபோல, கட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொண்டர்கள் நிர்வாகிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதற்காக நீக்கப்பட்டார்கள்  என வெள்ளை அறிக்கையாக வழங்கிட வேண்டும்.  கட்சியை நான் தான் வளர்த்தேன் என சீமான் கூறுகிறார். உங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை வளர்த்த கட்சி என்றால் நீங்கள் சொல்வதற்கு முழு உரிமை உண்டு. கட்சியை வளர்த்ததற்கு எங்களுக்கும் பங்கு உள்ளது. கட்சியின் அலுவலகத்தில் தனி நபர் பாக்கியராஜ் பெயருக்கு எதற்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும். கட்சியின் பெயரில் தான் பத்திர பதிவு செய்திருக்க வேண்டும்.
சரியான முறையில் பணம் செலவழித்து இருந்தால் இன்று நாம் தமிழர் கட்சியில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள்.  நான் நீதிபதியாக வேண்டும் என நினைத்து தான் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தேன். ஆனால் நான் தமிழர் கட்சியில் சேர்ந்த பின்பு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக சென்று வருகிறேன்.

பாலியல் வழக்கில் உள்ள விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுபடுத்த வேண்டும்.  இன்னும் பலர் இந்த கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது  ஸ்ரீரங்கம்- மணப்பாறை செயலாளர்  பேரா.முருகேசன், துறையூர், முசிறி செயலாளர் நாகராஜ், மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ், மாவட்ட வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் குப்புசாமி, தஞ்சை நடுவன் மாவட்ட செயலாளர் ஜாபர், பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர் சைமன், லால்குடி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் லோகநாதன், திருச்சி தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அருணாச்சலம், இணை செயலாளர் கிருஷ்ணன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்