தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 2026சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக, அதிமுக கூட்டணி தொடரும். திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு கூட்டணிகள் மாறுவதற்கு 2 நாட்களே அதிகம். கூட்டணியை பொறுத்தவரை இன்னும் தேர்தலை சந்திப்பதற்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மதுஒழிப்பு மாநாட்டிற்கு முதலில் அவர்கள் கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடட்டும். அதன்பிறகு தேமுதிகவிற்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும். பாரதிய ஜனதா கட்சியினர் அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா? அல்லது அவர் தானாக சென்று மன்னிப்பு கேட்டாரா? என்பது எனக்கு தெரியாது. அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார், மாநகர அவைத்தலைவர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், துணைச் செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், ராஜ்குமார் மற்றும் பகுதி செயலாளர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments are closed.