Rock Fort Times
Online News

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்….

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம். இக்கோவிலில் வைகாசி விசாகம், தைப்பூசத் தேரோட்டம் விமரிசையாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 25-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று ( 02.06.2023 ) காலை நடைபெற்றது. காலை 9 மணியளவில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகன் பெரிய தேரிலும், விநாயகர் சின்ன தேரிலும் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10.15 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஆவின் சேர்மன் பழனியாண்டி, தாசில்தார் சதீஷ், முன்னாள் அறங்காவலர் உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத்தலைவர் தீபன் சக்ரவர்த்தி‍ மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர் ஐயப்பன், அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா, ஏசி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரின் முன்னால் மங்கள வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு உபயதாரர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்