விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில், திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மற்ற கூட்டணிகள் தோல்வியைத் தழுவின. இந்த கூட்டணிகளுக்கு இடையே தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் தோல்வி அடைந்தது. இருந்தும் 8.19 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றது
இந்நிலையில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிட உள்ளார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்
Comments are closed.