150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் சமீப காலமாக உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனை மறுத்த அவரது மனைவி பிரேமலதா, இன்று ( 25.08.2023) விஜயகாந்துக்கு 71- வது பிறந்தநாள், அவர் தொண்டர்களை சந்திப்பார் என்று தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் காலை முதல் குவிய தொடங்கினர். சற்று நேரத்திற்கு பிறகு விஜயகாந்த் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த நிலையில் தொண்டர்களை சந்திக்க சோபாவில் அமர வைக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சந்தோசத்தில் கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டனர். அப்போது கட்டை விரலை உயர்த்தி தொண்டர்களின் வரவேற்பை விஜயகாந்த் ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். விஜயகாந்த் பிறந்தநாள் ஒட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.