Rock Fort Times
Online News

பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது யார் ஆட்சியில்? – திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்…!

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று(24-07-2024) நடந்தது. ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்காதேவி, ஜெய நிர்மலா,  விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தை தொடங்கி வைத்த மேயர் பேசும் போது,  திருச்சி மாநகராட்சியில்  4 கோட்டங்களிலும் நாய்கள் பிடிப்பதற்கு ஒரு வாகனம் மட்டுமே இருந்தது. அதனை நான்காக உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியில் 25 ஆயிரம் நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 929 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.  அதேபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 380 மாடுகள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 858 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. அதில் 17 கிலோமீட்டர் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது.  இதற்காக நமக்கு  ஒத்துழைப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-
ரெக்ஸ் (காங்) :-மழைக்காலம் நெருங்கி வருவதால் மாநகராட்சி முழுவதும் உள்ள வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
அம்பிகாபதி (அதிமுக):- புதுக்கோட்டை ரோடு பகுதியில் ஒரு பக்கத்தில் மின்விளக்கு போடப்பட்டு உள்ளது. மறுபக்கத்தில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: உங்கள் ஆட்சியில் திட்டத்தை கொண்டு வந்து விட்டு மற்ற மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து விட்டு திருச்சி மாநகராட்சிக்கு சாலைப் பணிகளுக்கு
நிதி ஒதுக்காமல் விட்டது ஏன்?…
அம்பிகாபதி (அதிமுக): திட்டத்தை தற்பொழுது செயல்படுத்துகிற நிலையில் உங்கள் அரசு தானே இருக்கிறது.
மேயர்: அதிமுகவின் 10 ஆண்டுகால மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக வார்டுகளை பாரபட்சமாக பார்த்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து வார்டு கவுன்சிலருக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாறி, மாறி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் பேசியதால் அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
சுரேஷ் (இ. கம்யூ)துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன் (வி.சி.க.): இரட்டை வாய்க்கால் தூர் வாரப்படாமல் புதராக உள்ளது. எனவே உடனடியாக வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதில் தடுப்பணை கட்ட வேண்டும்.

பயாஸ்(மனிதநேய மக்கள் கட்சி), கமல் முஸ்தபா;-  வார்டில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய கூடம் அமைக்க வேண்டும்.
கோவிந்தராஜ் (காங்): எனது வார்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.
ஜவகர் ( காங்): கொள்ளிடம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எப்போது செயல்படும்.
மேயர்: சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.  விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
கவுன்சிலர்கள் எல்ஐசி சங்கர், முத்து செல்வம், தாஜுதீன் ஆகியோர் பேசும்போது, மாநகராட்சி பகுதியில் வசூலிக்கப்படும் குப்பை வரி (எஸ் யு சி) முன்பு உள்ளதை விட பத்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் பெட்டிக்கடை உள்ளிட்ட சாதாரண கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மிகவும்
பாதிக்கப்படுகிறார்கள்.
மேயர்: இந்த வரி விதிப்பு தொடர்பாக மீண்டும் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்