கோவையைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் . இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார். அவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகச வீடியோ பதிவிடுவதால் அது அவரது ரசிகர்களை தவறான பாதைக்கு திருப்பி விடும் என்று பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த மாதம் மகாராஷ்ட்ராவுக்கு தன்னுடைய பைக்கில் டிடிஎப் வாசன் பைக் டிரிப் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற வாசன் திடீரென வீலிங் செய்ய முயன்றபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். அவர் கவச உடைகள் முறையாக அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.
வாசன் விபத்தில் சிக்கிய காட்சிகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதில் வாசன் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கியது பதிவாகி இருந்ததால் அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசனுக்கு ஜாமீன் கோரி தொடர்ந்து முறையிடப்பட்டு வந்தாலும் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் தர மறுத்ததோடு, வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் என காட்டமாக கூறினார்.
இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். இதனால் 2033-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி வரை டிடிஎப் வாசனால் பைக் ஓட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.