திருச்சி திருவானைக்காவல் கோவில் யானைக்கு 22-வது பிறந்தநாள்- பழங்கள் கொடுத்து பக்தர்கள் உற்சாக கொண்டாட்டம்…!
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதுடன் கோவில் யானை அகிலாவிடமும் ஆசி பெற்று செல்ஃபி எடுத்துக் கொள்வது வழக்கம். கோவில் யானை அகிலா 2002 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. அன்றுமுதல் அகிலா கடந்த 12 ஆண்டுகளாக இறை பணியாற்றி வருகிறது. அகிலா, குளிப்பதற்கு கோவில் நந்தவனத்தில் நீச்சல் குளம், நடைபாதை மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானை அகிலாவுக்கு 22-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அகிலாவுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள், பொறி பொட்டுக்கடலை, மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
Comments are closed.