திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர்
திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய மார்க்கெட் போன்றவை அமையும் பொழுது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு வழி வகுக்கும்.
மண்டல தலைவர் மதிவாணன்:
திருச்சி டோல்கேட் பகுதியில் தலைவர் கருணாநிதியின் சிலையை விளையாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார். தற்பொழுது டோல்கேட் என்று அழைக்கப்பட்டு வரும் அந்த இடம் இனி கலைஞர் டோல்கேட் என மாற்றி அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சுரேஷ் (இ.கம்யு) :
விரைவில் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி:
65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மட்டுமின்றி மாநகர் பகுதி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது. இதனால், இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஜவகர் (காங்) :
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு கண்டு வரி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாபர் அலி (திமுக):
எனது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து செல்வம் (திமுக):
எனது வார்டில் உள்ள பள்ளிக்கு இரண்டு வரி போட்டதை சரி செய்து கொடுக்க வேண்டும்.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) :
எனது வார்டில் சமுதாயம் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
ராமதாஸ் (திமுக):
எனது வார்டில் இரண்டு குழந்தைகளை நாய் கடித்து விட்டது. இது தொடர்பாக மேயர் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கமிஷனர் வைத்திலிங்கம் : மாநகராட்சி தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அங்கேயே விட்டு விட வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. அதனால் நாம் அதனை வேறு இடத்தில் கொண்டு போய் விட முடியாது.
முத்துச்செல்வம் (திமுக ) :
நாய்களை மாநகராட்சி சார்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் அன்பழகன் : – இது தொடர்பாக தனியாக ஆலோசனை செய்து ஒரு முடிவு எடுப்போம்.
இதேபோல கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.