Rock Fort Times
Online News

நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

பிரபல நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று( மே 30) காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்,

முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமார் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த மோகினி மணி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.

அண்ணாமலை,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி, வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பட நடிகர்களும் அஜித்குமார் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்