புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரை சேர்ந்தவர் மாதவன் ( வயது 55). கம்பி கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் இறந்து விட்டார். இவரது கடைசி மகன் சதீஷ்குமார் (30). பி.இ.பட்டதாரி.
வெளிநாட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய சதீஷ்குமார் சென்னையில் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர் வந்து தந்தை நடத்தும் கடையில் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் . இந்தநிலையில், இன்று (31-01-2024) வீட்டில் இருந்த தந்தை மாதவனிடம் செலவிற்கு பணம் கேட்டு சதீஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். தந்தை பணம் தர மறுக்கவே, ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதற்கு பயந்து வீட்டில் இருந்து வெளியே சாலைக்கு ஓடி வந்த மாதவனை துரத்தி வந்து சதீஷ்குமார் வெட்டி கொலை செய்துவிட்டு வீட்டுக்குள் போய் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.