தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 கூடுதல் புறநகர் புதிய பேருந்துகள் வழித்தட தொடக்க விழா உறையூரில் நடந்தது. புதிய பஸ் சேவைகளை மேயர் அன்பழகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொழிலதிபர் அருண்நேரு, மண்டல பொதுமேலாளர் சக்திவேல் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்படி, திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து மணப்பாறை (தினசரி 3 நடைகள்), மருதாண்டாக்குறிச்சி (தினசரி 4 நடைகள்), வாசன்நகர் (தினசரி 3 நடைகள்), வேளாண்மைப் பல்கலைக்கழகம் (தினசரி 2 நடைகள்) ஆகிய வழித்தடங்களிலும், இதன் மறுவழித்தடங்களிலும் என 8 புதிய பஸ் சேவைகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து தில்லைநகர், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் வழியாக மணப்பாறை செல்லவும், ராம்ஜிநகர், பிராட்டியூர், கருமண்டபம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தில்லைநகர் செல்லவும் புதிய பஸ் வசதி பெறுவார்கள். மருதாண்டாக்குறிச்சி, பிரகாஷ்நகர், அரவானுார், மேலபாண்டமங்கலம், லிங்கநகர் போன்ற இடங்களுக்கு காலை, மாலை கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பார்கள். மேலும், இரட்டை வாய்க்கால், உய்யக்கொண்டான் திருமலை, ஸ்ரீனிவாசநகர், குமரன் நகர் பகுதி மக்களும் கூடுதல் பஸ் வசதி பெறுவார்கள் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.