புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் வாட்டர் டேங்கில் மனித கழிவுகளை கலந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வாட்டர் டேங்கில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் நேற்று ( பிப்.06 ) பரபரப்பை கிளப்பினர். இது தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட கலெக்டர் எம் பிரதீப்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திருச்சி மாநகராட்சி 20வது வார்டு வாட்டர் டேங்கில் மனிதக் கழிவுகள் கலந்ததாக புகார் எழுந்தது. ஆனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அப்பகுதியில் வசிக்கக்கூடிய யாரோ ஒருவர் உணவுப் பொட்டலங்களை வீசி சென்றுள்ளார். இது நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இனியும் இது தொடர்பான பொய் தகவல்களை பரப்பினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Comments are closed.