திருச்சி, திருவெறும்பூரில் உள்ள பெல் தொழிற்சாலை வளாகத்தில், திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருமான வரிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில், மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் டி.வசந்தன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், திருச்சியில் அமைந்துள்ள பெல், துப்பாக்கி, ஹெச்.ஏ.பி.எஃப், மின்வாரியம், ரயில்வே மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் டி. வசந்தன் தெரிவித்ததாவது; சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது ரீ- பண்ட் கோரி இருந்தால் சரியான விலக்குகள் மற்றும் சரியான கழித்தல்களைக் கணக்கிட்டு, சரியான வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர்கள் சிலர் தேவையான ஆவண, ஆதாரங்கள் இல்லாமல் தங்கள் வருமான அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். இது ஒரு சட்டவிரோதமாகும். மேலும் இது கூடுதல் வரிகள், வட்டி, அபராதம் மற்றும் சட்டவழக்குத் தொடரப்படுவதற்கும் வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற தவறான ரீ- பண்ட் கோரிக்கையுடன் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார். முன்னதாக வருமான வரி இணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்றார். வருமான வரி துணை இயக்குநர் ஸ்வீதா நன்றி கூறினார்.
Comments are closed.