ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ராகுல் புதைத்து வருகிறார்…* திமுக கடும் விமர்சனம் !
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தது. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் பிரிந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற திமுக, ஜூன் 8ம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தை புறக்கணித்தது. இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுகவின் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதில், “தான் பிரதமராவதை விட பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இதன்மூலம் அவர் தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ராகுல் புதைத்து வருகிறார். அது தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.
இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என முடிவு எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும். ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். கூட்டணியில் இருந்துகொண்டே குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார். இதே காங்கிரஸ் கட்சியை சில பல கோடிகளைக் கொடுத்து, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார் என த.வெ.க.சொன்னது. ஆனால் இன்று எத்தனை கோடி கொடுத்து விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற்றார். மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ராகுல் பேசினாரா என்றால் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும், இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது என்று சொல்வதற்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கருக்கு வெட்கமாக இல்லையா? மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். கழகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதே இனமானமும், தன்மானமும் தான். இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

Comments are closed.