நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத் தழுவி இருந்தார். இந்நிலையில் நடிகரும், திராவிடக் கொள்கைப் பற்றாளருமான சத்யராஜ், ஸ்டாலினின் தோல்வியைத் தாங்க முடியாமல் மேடையில் அழுதது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் மேடையில் பேசுகையில், “நான் பொதுவாக எல்லாவற்றையும் கிண்டலாக, நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் நபர். ஆனால், கொளத்தூரில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றதை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அது எனக்குப் பேரதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் தந்துள்ளது” என்று நா தழுதழுக்கக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொளத்தூர் மக்களை நோக்கி, “இப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரைத் தோற்கடித்து விட்டீர்களே, நீங்க செய்தது நியாயமா? பட்டுத் தெளிந்தால்தான் புத்தி வரும். அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று கண்கலங்கியவாறே ஆவேசமாகப் பேசினார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Comments are closed.