Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட் புதிய முனையத்தில் ஆட்டோக்களுக்கு தடை அறிவிப்பால் பரபரப்பு..!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 1,100 கோடி மதிப்பிலான, புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பிரதான சாலையிலிருந்து சுமார் ஒன்றே முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய முனையத்துக்கு பயணிகளும், அவர்களை வழியனுப்ப மற்றும் வரவேற்க வந்த உறவினர்களும் நடந்து செல்லும் அவலம் தொடர்ந்துள்ளது. முனையம் திறந்த சில நாள்களிலேயே, இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. விமான நிலைய வட்டாரமும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். என்றாலும் பேருந்து வசதி இது நாள்வரையில் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், உள்ளே சென்று வர ஆட்டோ வசதியாவது தேவை என்பதன் அடிப்படையில் ஆட்டோ சேவைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு வாடகை கார்கள் வைத்துள்ள நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. வாடகைக்கார்கள் விமான நிலையத்துக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி நிறுத்தியுள்ளனர். எனவே, அவர்கள் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக விமான நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில், திடீரென புதன்கிழமை முதல் புதிய முனையத்துக்கு ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர். ஆட்டோக்கள் நுழைய தடை என்று அறிவித்து விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இந் திடீர் உத்தரவால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்களும் ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கச் செயலாளர் சுகுமாறன் கூறியது :
திருச்சி விமான நிலைய புதிய முனையத்திற்கு, திருச்சி – புதுகை சாலையில் இருந்து, பயணிகள் நடந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், காரில் தான் வர வேண்டும். திருச்சி விமான நிலையத்திற்கு வருபவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்ல. ஏழை, எளிய, நடுத்தர மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஆட்டோ பயண கட்டணம் மட்டுமே கட்டுப்படியாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருச்சி விமான நிலையத்திற்குள் ஒரு முறை வந்து செல்ல, 30 நிமிடத்திற்கு, 80 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்த நிலையில், அந்த பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தோம். இந்நிலையில், முழுமையாகவே ஆட்டோக்கள் வருவதை தடுத்து இருக்கின்றனர். திருச்சி விமான நிலைய ஆணையத்தின் உத்தரவின்றி, தன்னிச்சையாகவே இங்குள்ள டிராவல்ஸ் நிறுவனம் இதுபோன்ற அறிவிப்பை வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் விமான நிலைய ஆணைய இயக்குனர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகளை ஏற்றி நிலையத்துக்குள் செல்ல மட்டும் தாற்காலிக அனுமதி என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏற்றிச்சென்றால் திரும்பி வரும்போது டாக்சி ஓட்டுநர்கள் எங்களை ததாக வார்த்தையில் திட்டி தகாறு செய்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்டம் முழுவதும் உள்ள சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர்களை ஒன்று திரட்டி, திருச்சி விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடை செய்யும் வகையில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்றார். இதுகுறித்து திருச்சி விமான நிலைய ஆணையர் பி. சுப்பிரமணி கூறுகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, ஆட்டோக்கள் திருச்சி விமான நிலையத்திற்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விமான பயணிகள் சிரமத்தை கவனத்தில் கொண்டு, பயணிகள் வசதிக்காக எலெக்ட்ரிக் (பேட்டரி கார் உள்ளிட்ட) வாகனங்கள் வசதி விரைவில் செய்யப்படும். அதுவரை பயணிகளை விமான நிலையத்துக்குள் ஏற்றிச்செல்ல மட்டும் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்