தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் ஒன்றாக சேர்ந்து என்னை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பார்த்தனர்…* திருச்சியில் முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு..!
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று(01-06-2026) அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு வருகை தந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு முதல்வர் விஜய் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து மாலை 4-15 மணியளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இரண்டு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றாலும் திருச்சி கிழக்குத் தொகுதி எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தொகுதி தான். அந்த தொகுதி மக்களுக்கு எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமின்றி யார் போட்டியிட்டு வென்றாலும் 234 தொகுதியும் எனது தொகுதி தான். நம்மளை தற்குறி, தற்குறி என்று திமுக மற்றும் பலர் கூறினார்கள். தற்குறி என்று நம்மளை ஏளனம் செய்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கிவிட்டு, உடன்பிறப்பே வெளியே வா என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பார்க்க வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். அதை சரி செய்ய வேண்டாமா? அதை சரி செய்துவிட்டு பிறகு களத்தில் இறங்குகிறேன். திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே சரி செய்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா?. நீங்க தவறு செய்துவிட்டு சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று என் மேல பழியை தூக்கி போடுறீங்க. தகுதி வாய்ந்த அதிகாரிகளை காவல் துறையில் நியமித்திருக்கிறேன். என்ன பழி போட்டாலும் உண்மையாக, உறுதியாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்துகாட்டுவேன். அவர்கள்தான் ஆட்சியிலேயே இல்லையே. அவர்களை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று சிலர் பேசுவார்கள். அவர்களுக்கு தவறு செய்தது யார் என்று எடுத்துக் கூற வேண்டும் இல்லையா? தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் ஒன்றாக சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மூலையில் அமர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அதனை எல்லாம் முறியடித்து ஆட்சி அமைத்துள்ளோம். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Comments are closed.