முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் இன்று திருச்சி வருகை:* வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்…!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 1) திருச்சி வருகிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர், அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தனியார் கல்லூரி வளாகத்துக்கு செல்கிறார். பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை 4 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்துப் பேசுகிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். முதல்வர் விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வாகனத்தில் வரும்போது, அவரது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி வரும் முதல்வர் விஜய்க்கு, திருச்சி விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் இடம்வரை சாலையின் இரு புறங்களிலும் வரவேற்பு அளிக்க தவெகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். முதல்வர் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே கட்சி கொடிகளும், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.