ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலையில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி உறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் ஆலயத்தில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வரவேற்றார்.
அவருடன் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின், உறையூர் வெக்காளியம்மனை சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு சென்று, அங்கு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அம்மனை தரிசனம் செய்தார்.
அதன் பின்னர், சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் . முதலமைச்சர் மனைவி வருகையையொட்டி கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
Comments are closed.