உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த வெங்கிட சுப்பிரமணி மோகனாவும் ஒருவர். இவர் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும். அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளீர்கள். தங்களது நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும். மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் தங்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.