திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவர் ஆன இவருக்கும், தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தங்கமணிக்கும், அவரது மாமனாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு மற்றொரு 3 வயது மகளான ரித்திகா, ஒன்றரை வயது மகன் லஜித் ஆகியோருடன் மாயமானார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இன்று காலை தங்கமணி வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். இதையடுத்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பின் முதலில் தங்கமணி மற்றும் லஜித் ஆகியோரின் உடல்களை மீட்டனர். தனது உடலில் குழந்தைகளை துண்டால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தங்கமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவரின் உடல்களை மீட்ட தீயணைப்பு துறையினர் ரித்திகாவின் உடலையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். மீட்கப்பட்ட 3 உடல்களையும் மணப்பாறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கணவர் வெளியூரில் இருந்தநிலையில் மாமனார்-மருமகள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.