Rock Fort Times
Online News

கரூரில் துயர சம்பவம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி…!

கரூர் ஆண்டாங்கோவில் புதூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12). அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11). அஸ்வின் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், ஸ்ரீ விஷ்ணு 8-ம் வகுப்பும், மாரிமுத்து 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று திங்கள்கிழமை காலை 3 பேரும் விளையாட செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால், மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகே மூன்று பேரின் காலணிகளும் கிடந்துள்ளன.
இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் இரவு 12 மணியளவில் மீட்டனர். ஆனால், அவர்கள் 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. மாணவர்களின் உடல்களை கரூர் நகர காவல் நிலையத்தினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், விளையாடச் சென்ற மாணவர்கள் கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் ஒரே நேரத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்