திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் திலகர் தெரு பகுதியை சேர்ந்தவர் இளந்தீபன் (38). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சதீஷ் (35). இவர்கள் இருவரும் நேற்று(5-1-2024) மாலை இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க, பேருந்து ஓட்டுநர் பேருந்தை வலப்பக்கம் வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதில், பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது.
இதில், நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். அவர்களில் இளந்தீபன் மீது பேருந்து ஏறி இறங்கியதால்
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் பலத்த காயத்துடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த திருச்சி மாநகர காவல்துறை தெற்கு பிரிவு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நடத்தி வருகின்றனர். மாநகரப் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகள், நாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.