தமிழகத்தில் மதுபானங்களின் விற்பனை மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. அதுவே பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் இரண்டு மடங்காக வசூல் அதிகரிக்கும். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தை சீர்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்படும் மதுபானக்கூடங்கள் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இரவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் , பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுபான கூடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள் நடத்த ஆண்டு தோறும் செலுத்தப்படும் சிறப்புரிமை கட்டணத்தை இரண்டு மடங்காக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக 15 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் தற்போது அதனை 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கிளப்களுக்கு அனுமதி பெற 30 லட்சம் ரூபாயாகவும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கும் மாநகராட்சி பகுதிகளில் 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் வசிக்கும் மாநகராட்சி பகுதிக்கு 20 லட்சமாகவும், நகராட்சி பகுதிகளில் 15 லட்சமாகவும், மற்ற பகுதிகளுக்கு 10 லட்சமாகவும் அனுமதி கட்டணத்தை நிர்ணயித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.